மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கெடுக்காமல் ஏமாற்றுவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
- ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல.
- போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2021-ம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறையை அறிமுகம் செய்வோம் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதியை செயல்படுத்தவில்லை.
அதுகுறித்து கேட்கும் போதெல்லாம், மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டை கணக்கிட போதிய பணியாளர்கள் இல்லை என்று கூறி வந்தது. ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட பணியாளர்கள் தேவையில்லை. அதனால் மாதந்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதனடிப்படையில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்பதால் ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை மிச்சமாகும்.
எனவே, ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ப்ரீபெய்ட் மீட்டரைப் பயன்படுத்தி, மாதாந்திர மின்கணக்கீட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.