தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்- விடிய, விடிய சோதனை

Published On 2024-11-03 06:58 GMT   |   Update On 2024-11-03 06:58 GMT
  • விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
  • சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்கள் வெடிகுண்டு புரளிகள் இல்லாத நிலையில் மீண்டும் மிரட்டல் வரத்தொடங்கி உள்ளது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் உள்ள இணையதளத்திற்கு நேற்று நள்ளிரவு இமெயிலில் தகவல் வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இமெயில் மிரட்டலில் குறிப்பிட்ட விமானத்திற்கோ அல்லது விமான நிலையத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு என்றோ குறிப்பிடாமல் இருந்ததால் விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி, ஓடுபாதை, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், பயணிகள் புறப்பாடு, சரக்கு பார்சல்களை விமானங்களில் ஏற்றும் பகுதி ஆகிய இடங்களில் இன்று காலை வரை விடிய,விடிய சோதனை நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் வந்த இமெயில் முகவரியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்கள் வெடிகுண்டு புரளிகள் இல்லாத நிலையில் மீண்டும் மிரட்டல் வரத்தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News