தமிழ்நாடு

தமிழக அரசு சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்துவதை சாதனையாக பார்க்கிறேன்- தருமபுரம் ஆதீனம் பேட்டி

Published On 2024-11-10 06:29 GMT   |   Update On 2024-11-10 06:29 GMT
  • எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
  • இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தஞ்சாவூா்:

தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாமன்னர் ராஜராஜசோழன் 1039-வது சதயவிழா நடந்து வருகிறது. விழாவில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா சிறப்பாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியகோவில் மிக புண்ணியம் பெற்றது. திருவிசைப்பா பாடல் பெற்ற தலம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் ஏற்ப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரிய கோவிலின் கட்டுமானம் குறித்து உலக அளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாதனையாக ராஜராஜசோழன் செய்துள்ளார். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக ராஜராஜ சோழன் விளங்கினார். உலகம் முழுவதும் சென்று தனது வீரத்தை பறைசாற்றி நமக்கு திருமுறையை மீட்டுக் கொடுத்தவர். திருச்சி உய்யக்கொண்டான் மலையில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு அனைத்து ஆதீனங்களும் வருகிறார்கள்.

அப்போது சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் தொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளோம். தற்போது உள்ள அரசு ஆன்மீக அரசு.

எல்லா முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். திருப்பணிகளை விரைந்து செய்து, அதிகளவில் கும்பாபிஷேகம் செய்வதை சாதனையாக கருதுகிறேன்.

தமிழகத்தில் பெரிய கோவில்கள் மட்டுமின்றி, சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகத்தை இந்த அரசு நடத்துவதை சாதனையாக பார்க்கிறேன். பெரிய கோவில்களை காட்டிலும், கிராம கோவில்களின் உண்டியல் வருமானம் அதிகளவில் உள்ளது. கிராம கோவில்களை யாரும் பராமரிக்காமல் சென்று விடக்கூடாது என்பதற்காக, அந்த கோவில்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்துகிறது.

இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் ஆதீனத்திற்கு சொந்தமான ரூ.400 கோடி மதிப்பிலான நிலங்கள், திருச்சியில் ரூ.500 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News