தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும்- குஷ்பு

Published On 2024-11-22 05:08 GMT   |   Update On 2024-11-22 05:08 GMT
  • நடிகர் விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்து உள்ளார்.
  • தேர்தல் வரும்போதுதான் அணிகள் மாறும். முடிவுகளும் மாறும்.

சென்னை:

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

நாட்டை யார் ஆண்டால் நல்லது. யார் ஆண்டால் நல்லது செய்வார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் தான் தொடர்ந்து பிரதமர் மோடியை தேர்வு செய்கிறார்கள்.

தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை மனதில் கொண்டு காங்கிரஸ் மேற்கொண்ட தவறான முயற்சிகள் நாட்டில் பிரச்சனைகளுக்குத்தான் காரணமாக அமைந்தது.

மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடியை விமர்சித்தார்கள். ஆனால் அங்கு பிரச்சனைக்கு காரணமே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ப.சிதம்பரம் எடுத்த முடிவுகள்தான் என்பதை காங்கிரஸ் கட்சியினரே ஒத்துக்கொண்டுள்ளார்கள். இனி மணிப்பூர் விவகாரம் பற்றி பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது.

நாளை வெளிவரப் போகும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலிலும் பாரதிய ஜனதாவே வெல்லும். 2026-ல் நடைபெற போகும் தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி எப்படி அமையும் என்பதை டெல்லி மேலிடம் முடிவு செய்யும்.

எப்படி கூட்டணி அமைய வேண்டும் என்பது எங்களைவிட அவர்களுக்கு நன்றாக தெரியும். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வகுக்கும் வியூகம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

நடிகர் விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்து உள்ளார். தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். அப்படியானால் அதற்கான வியூகம் என்ன என்பதையும் அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் உள்ளன. இன்னும் கால அவகாசம் இருக்கிறது. தேர்தல் வரும்போதுதான் அணிகள் மாறும். முடிவுகளும் மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News