தமிழ்நாடு

'அரிசன் காலனி' அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

Published On 2024-11-25 12:13 GMT   |   Update On 2024-11-25 12:13 GMT
  • அரசுப்பள்ளி பெயர் மாற்றத்திற்காக போராடிய கணேசனுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்தார்.
  • பெயர் மாற்றத்திற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் அமைச்சர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி, 'அரிசன் காலனி' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், 'மல்லசமுத்திரம் கிழக்கு' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயர் மாற்றம் செய்தார்

'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளை குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளியின் பெயரை மாற்றம் செய்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.

தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று 'அரிசன் காலனி' எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம். இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.

ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் திரு.G.அன்பழகன் அவர்களிடம் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News