'Get Out' பிரசாரத்தில் கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர்
- கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
- தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறுகிறது. சுமார் 300 தொண்டர்கள் அரங்கிற்குள் அமர்ந்திருக்க த.வெ.க. தலைவர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார். மேடை ஏறியதும் 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
கையெழுத்து இயக்கத்தில் முதல் ஆளாக அதன் தலைவர் விஜய் கையெழுத்திட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்பட பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டனர். அப்போது மேடையில் இருந்த பிரசாந்த் கிஷோரையும் கையெழுத்திட த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டார்.
அப்போது, "இல்லை, இல்லை வேண்டாம்" என்றவாரு செய்கையில் தெரிவித்த பிரசாந்த் கிஷோர் கடைசி வரை கையெழுத்திடாமல் நழுவி கொண்டார். த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கையெழுத்து இயக்கத்திற்காக அரங்கத்தின் மேடையில் வைக்கப்பட்ட பேனரில், "புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் தணிப்பு, அரசியல் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம் ஆகியற்றுக்கு எதிராக போராட உறுதியேற்போம்," என எழுதப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.