தமிழ்நாடு (Tamil Nadu)

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்த கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தை காணலாம்.

கோத்தகிரியில் தாசில்தார் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2024-10-24 05:37 GMT   |   Update On 2024-10-24 05:37 GMT
  • தாசில்தார் அலுவலகத்தில் இருந்தவர்களை வெளியில் விடாமல், கதவை பூட்டி விட்டு, அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
  • சோதனையில் ஏராளமான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தாசில்தாராக கோமதி என்பவர் உள்ளார்.

இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் அனுபோக சான்றிதழ், அடங்கல் உள்ளிட்ட பல சான்றிதழ்களை வழங்குவதற்காக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், இதை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அலுவலகம் நேரம் முடிந்த பிறகு இங்கு வந்து சான்றிதழ்களை பெற்று செல்வதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்றிரவு கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த புரோக்கர் ஒருவர் தப்பியோட முயன்றார். உடனடியாக அவரை பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்தவர்களை வெளியில் விடாமல், கதவை பூட்டி விட்டு, அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மேலும், கோத்தகிரி தாசில்தார் கோமதி, அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

இரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது விடிய விடிய நடந்தது. அதிகாலையிலேயே சோதனை முடிந்து போலீசார் திரும்பி சென்றுள்ளனர். இந்த சோதனையின்போது தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.10 ஆயிரத்து 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.

மேலும் தாசில்தார், துணை தாசில்தார், 2 வி.ஏ.ஓ.க்கள் ஆகியோரின் வங்கி கணக்கில் பட்டா, சிட்டா உள்ளிட்ட சான்றிதழ் வாங்குவதற்காக ரூ.6 லட்சத்திற்கு மேல் லஞ்சமாக பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News