செய்திகள்

மொபைல் நெட்வொர்க் முடக்கங்களை முறைப்படுத்த வேண்டும்: பிஜு ஜனதா தளம் எம்பி வலியுறுத்தல்

Published On 2017-03-22 11:20 GMT   |   Update On 2017-03-22 11:20 GMT
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க், பிராட்பேண்ட் சேவை நிறுத்தப்படுவதால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுவதால், நிறுவனங்களின் விதிமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என பிஜு ஜனதா தளம் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் இண்டர்நெட் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் நிறுத்தப்படுவதால் மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 650 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஜு ஜனதா தளம் எம்.பி. பாய்ஜெயந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மக்களவையில் பேசிய பாய்ஜெயந்த், ‘இந்தியாவில் இண்டர்நெட் மற்றும் பிராட்பேண்ட் சேவை வழங்கும் எந்த நிறுவனத்திற்கும் திடீரென சேவைகளை முடக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே சேவைகளை நிறுத்த அனுமதிக்க வேண்டும்’ என தெரிவித்தார். 



இண்டர்நெட் மற்றும் மொபைல் சேவைகளை நிறுத்தும் கட்டுப்பாடுகளை முறைப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து பல மாதங்களாக போராட்டம் நடந்தபோது, போராட்டக் குழுவினரை அடக்கும் வகையில் அனைத்து இன்டர்நெட் சேவைகளும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News