செய்திகள்

அமெரிக்க தூதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதாக புகார்: ரஷியா மீது குற்றச்சாட்டு

Published On 2016-06-28 23:44 GMT   |   Update On 2016-06-28 23:44 GMT
அமெரிக்காவில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாக ரஷியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியுள்ளது
வாஷிங்டன் :

ரஷியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள், தங்களது குடும்பத்தினருடன் மாஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரஷிய பாதுகாப்பு படையினர், உளவுத் துறையினர், போக்குவரத்து போலீசார் அதிக தொல்லை கொடுப்பதாகவும், மிரட்டுவதாகவும் அமெரிக்காவின் `வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது.  இது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் எலிசபெத் டிருடியூ நிருபர்களிடம் கூறிதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அதிகமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பலவிதங்களில் தொல்லை அளிப்பதுடன் ரஷியாவின் பாதுகாப்பு படை மற்றும் உளவுத் துறையினரால் மிரட்டப்பட்டும் வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து போலீசார் அதிகமாக தொல்லை அளிக்கின்றனர். இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான்கெர்ரி மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்தபோது நடத்திய பேச்சுவார்த்தையில் கவலை தெரிவித்தார். ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் குறையவில்லை. இதுபற்றி ரஷியாவிடம் மீண்டும் புகார் தெரிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஷியாவோ, அமெரிக்காவில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதால்தான் பதில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதை அமெரிக்கா மறுத்து உள்ளது.

Similar News