செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

Published On 2016-10-29 03:02 GMT   |   Update On 2016-10-29 03:02 GMT
இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
புதுடெல்லி:

இந்தியாவில் உளவு பார்த்ததாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலை பார்த்து வந்த மெகமூத் அக்தர் நேற்று முன்தினம் கையும் களவுமாக மேலும் இரு உளவாளிகளுடன் பிடிபட்டார். அவரிடம் இருந்து உளவு பார்த்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து அவரை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி சுர்ஜித் சிங்கையும் அவருடைய குடும்பத்தினரையும் 48 மணி நேரத்தில் நாட்டில் இருந்து வெளியேறும்படி பாகிஸ்தான் உத்தரவிட்டது. அவர் தூதரக விதிமுறைகளை மீறியதாக இதற்கு பாகிஸ்தான் காரணம் கூறியது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றிய பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

அவர்(சுர்ஜித் சிங்) தூதரக விதிமுறைகளை மீறியதாக கூறி இருப்பது முழுக்க முழுக்க அடிப்படையற்றது. இந்த குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. இதுபோன்ற சாதாரண காரணங்கள் தவிர வேறு எதையும் பாகிஸ்தானால் கூற இயலாது.

பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை இந்திய அரசு கண்டிக்கிறது. இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் விதமாக உளவு பார்த்து சிக்கிய பாகிஸ்தான் தூதர அதிகாரி மெக்மூத் அக்தர் மீது இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு பின்பே பதிலுக்கு பாகிஸ்தான் இதை எடுத்து இருக்கிறது.

பாகிஸ்தானின் இதுபோன்ற செயல்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட மறுப்பதை உறுதி செய்வதாகவும் அமைந்து இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News