செய்திகள்

6500 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு ரூ.80 ஆயிரம் டிப்ஸ் வழங்கிய இங்கிலாந்து தொழில் அதிபர்

Published On 2017-01-15 08:03 GMT   |   Update On 2017-01-15 08:03 GMT
இங்கிலாந்து ஓட்டலில் ரூ.6500 உணவு சாப்பிட்டு விட்டு தொழில் அதிபர் ரூ.80 ஆயிரம் டிப்ஸ் வழங்கினார்.

லண்டன்:

இங்கிலாந்தில் உள்ள அயர்லாந்தில் போர்டாடவுன் என்ற இடத்தில் தி இந்தியன் ட்ரீ என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலை இந்தியர் நடத்தி வருகிறார்.

அங்கு தொழில் அதிபர் ஒருவர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அடிக்கடி உணவு சாப்பிட வருகிறார். அங்கு சமையல் கலைஞர் பாபு என்பவர் சமைக்கும் உணவு வகைகளை விரும்பி ருசித்து சாப்பிடுகிறார். அதன் மூலம் அவரது ரசிகராகவே அவர் ஆகிவிட்டார்.

சாப்பிட்ட பின் திரும்பும் போது சமையல் கலைஞர் பாபுவை அழைத்து பாராட்டி விட்டு செல்வார். இந்த நிலையில் சமீபத்தில் அந்த ஓட்டலில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேருடன் வந்து உணவு சாப்பிட்டார்.

தான் சாப்பிட்டதற்கான பில் தொகையாக ரூ.6500 (79.5 பவுண்டு) செலுத்தினார். அதன் பின்னர் வழக்கம் போல் சமையல் கலைஞர் பாபுவை அழைத்து உணவு சுவையாக இருந்ததாக கூறி பாராட்டினார்.

பிறகு யாரும் எதிர்பார்க்காத அளவில் பாபுவுக்கு ரூ.80 ஆயிரம் (1000 பவுண்டு) டிப்ஸ் ஆக வழங்கி அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சுவையான உணவு வழங்கிய பாபுவுக்கு நன்றி தெரிவித்ததுடன் இது மிகவும் சிறிய தொகைதான் என்று கூறிவிட்டு சென்றார்.

Similar News