செய்திகள்

4 மாதத்தில் சுமார் 39,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்திய சவுதி அரசு

Published On 2017-02-08 00:26 GMT   |   Update On 2017-02-08 00:26 GMT
விசா விதிமுறைகளை மீறியதாக கடந்த 4 மாதத்தில் சுமார் 39,000 பாகிஸ்தானியர்கள் சவுதி அரசால் நாடு கடத்தப்பட்டனர்.
ரியாத்:

கடந்த 4 மாதத்தில் குடியிருப்பு மற்றும் வேலை விதிமுறைகளை மீறியதற்காக சுமார் 39,000 பாகிஸ்தானியர்களை சவுதி அரேபிய  அரசு நாடு கடத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் குடியேறிய பாகிஸ்தானியர்களில் சிலர் விசா விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருசிலர் ஐஎஸ்  அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதாக வந்த தகவலை அடுத்து முழுமையான கண்காணிப்பு நடத்தப்பட்டு அதில் விதிமீறல்களில்  ஈடுபட்டவர்களை சவுதி அரசு நாடு கடத்தியது.

துருக்கியின் தயீஷ் எல்லையில் திட்டமிட்டு தாக்குதல் நடத்திய ஐஎஸ் அமைப்பின் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளில்  சிலர் போலி உரிமத்துடன் சவுதியில் நுழைந்துள்ளதாக வந்த தகவலையடுத்து பொதுமக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் விசா விதிமீறல்களில் ஈடுபட்ட மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக போதை  மருந்து கடத்தல், திருட்டு, மோசடி மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை சவுதி அரசு  நாடுகடத்தியதாக தெரிவித்துள்ளது. அதில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 39,000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சவுதிக்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு பாகிஸ்தானியரையும் முழுமையான சோதனைக்கு பின்னரே பணிக்கு  அமர்த்தும்படியும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

Similar News