செய்திகள்

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இலங்கை புதிய அரசியலமைப்பு சட்டத்துக்கான அறிக்கை இந்த மாதம் தாக்கல்

Published On 2017-04-01 15:24 GMT   |   Update On 2017-04-01 15:24 GMT
இலங்கையில் அதிகாரப் பகிர்வு மூலம் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வழிவகை செய்யும் புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கான முக்கிய அறிக்கை இந்த மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கொழும்பு:

இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்து, ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில், சிறிசேனா தலைமையிலான அரசாங்கம், தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கப்படும் என உறுதி அளித்தது.

அதன்படி, கடந்த 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்துக்கு மாற்றாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற இலங்கை அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளைத் தொடங்கி உள்ளது.

இதற்காக, பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதிகாரப் பகிர்வு, அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது மற்றும் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட வழிகளில் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து கலந்து இந்த குழு ஆலோசித்து அறிக்கை தயார் செய்துள்ளது. புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கான இந்த முக்கிய அறிக்கையானது இந்த மாதம் வெளியிடப்பட உள்ளது.

அறிக்கையை இந்த மாதம் தாக்கல் செய்வதற்கு, பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மூத்த தலைவர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதிபர் சிறிசேனா தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

Similar News