செய்திகள்
எடப்பாடி பழனிசாமிக்கு அங்குள்ள அமெரிக்க வாழ் இந்திய சிறுமி மலர்க்கொத்து வழங்கி வரவேற்ற காட்சி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் சென்றார்

Published On 2019-09-03 02:12 GMT   |   Update On 2019-09-03 02:12 GMT
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் சென்றார். அங்குள்ள பால் பண்ணைகளை அவர் பார்வையிட்டார்.
நியூயார்க் :

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வெளிநாடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் ஆகஸ்டு 28-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் விமானம் மூலம் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் 4 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

இங்கிலாந்து பயணத்திட்டத்தை முடித்துக்கொண்டு லண்டனில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் நேற்று காலை அமெரிக்காவின் மாகாணமான நியூயார்க்கை சென்றடைந்தார். நியூயார்க்கில் பல்வேறு கூட்டங்களில் அவர் பங்கேற்றார்.

அங்குள்ள தொழில் அதிபர்கள் மற்றும் தமிழக தொழில் முனைவோர் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் அந்த மாகாணத்தில் உள்ள பப்பல்லோ என்ற பெரிய நகரத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள பால் பண்ணைகளை அவர் பார்வையிட்டார்.

அவருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தொழில்துறை செயலாளர் முருகானந்தம், கால்நடை பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு, முதல்-அமைச்சரின் செயலாளர்கள் விஜயகுமார், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் சென்றுள்ளனர்.
Tags:    

Similar News