null
2024 ரீவைண்ட்: புயல் வெள்ளம் முதல் வெப்ப அலை வரை.. உலகம் சந்தித்த இயற்கைப் பேரழிவுகள் - மீள்பார்வை
- பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
- இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின
இயற்கைப் பேரழிவுகள் எந்த காலத்திலும் இருந்து வரும் ஒன்று. ஆனால் சமீப காலங்களாக அதிகரித்து வரும் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் விளங்குகிறது. தீவிர வானிலை நிலைமைகள், காலநிலை நெருக்கடிகளும் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் (2024) உலகம் முழுவதும் 3,700 பேர் இறந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது.
காலநிலை மாற்றம் என்றால் என்ன?
காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் வானிலை மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் நீண்ட கால மாற்றமாகும். இது இயற்கையாக நிகழக்கூடியது என்றாலும், புதைபடிவ[fossil] எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் 1800 களில் இருந்து காலநிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்தாத பட்சத்தில் ஆபத்துக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நூற்றாண்டின் இறுதியில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது.
இதற்கான முன்னறிவிப்பாக இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் வெப்ப அலைகள், காட்டுத்தீ, சூறாவளி, வறட்சி மற்றும் வெள்ளம் என பல்லாயிரக்கணக்கான உயிர்களை காலநிலை மாற்ற பேரழிவுகள் பலிகொண்டுள்ளது.
பேரழிவுகள்
அட்லாண்டிக் கடலில், 11 சூறாவளிகள், 18 புயல்கள் ஏற்பட்டன. இதனால் அமெரிக்க பகுதிகளில், ஜூலையில் பெரில், ஆகஸ்டில் டெபி, செப்டம்பரில் ஹெலன் மற்றும் அக்டோபரில் மில்டன் ஆகிய கொடிய சூறாவளிகளால் 330-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பில்லியன் டாலர்கள் வரை சேதம் ஏற்பட்டது.
மே மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் வாக்கில் தெற்கு பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் மே மாதத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில், 300 க்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்டது. 6,000 வீடுகள் முற்றாக அழித்தன.
கேரளாவில் ஜூலையில், நிலச்சரி மற்றும் கனமழையால் வயநாடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 400 பேர் இறந்தனர்.
தென்கிழக்கு ஆசியாவில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட யாகி என்ற சூப்பர் புயல், கிட்டத்தட்ட 600 பேரைக் பலிகொண்டது.
அக்டோபர் பிற்பகுதியில் தென்கிழக்கு ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வறண்ட பிரதேசமான மத்திய கிழக்கிலும் ஏப்ரலில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. துபாய் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.
பருவநிலை மாற்றம் வறட்சி, மழைப்பொழிவு மற்றும் வெப்பத்தால் பயிர்கள் சேதமடைந்து உணவுப் பற்றாக்குறை, உலகளவில் விவசாயத் தொழிலுக்கு இழப்புகளை அதிகரித்தது.
வெப்ப அலை மரணங்கள்
மழை வெள்ள பேரழிவுகளை தவிர்த்து, இந்த வருடம் கோடையில் உலகளவில் உணரப்பட்ட வெப்ப அலை ஆயிரக்கணக்கானோரை பலிகொண்டது.
உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை ஜனவரி முதல் செப்டம்பர் வரை சராசரியை விட 1.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
உலகளாவிய சராசரி வெப்பநிலை ஜூலை 22 ஆம் தேதி 17.15 டிகிரி செல்சியஸை எட்டியது. இதுவே இந்த வருடம் பூமியில் வெப்பமான நாளாக பதிவுசெய்யப்பட்டது. ஜூலை 21 பதிவான 17.09 டிகிரி செல்ஸியஸ் இரண்டாவது வெப்பமான நாளாக பதிவானது.
இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ விளைவு காரணமாக பல நாட்களாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை நிலவியது. ஹீட்ஸ்ட்ரோக் வெப்ப அலைகளால் ஆசியா முழுவதும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஹீட்வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் பாதிப்புகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகக் கூறுகிறது.
ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின் போது வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஐரோப்பாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளில் வெப்ப அலை காரணமாக 19 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன, குறிப்பாக கிரீஸ் மற்றும் இத்தாலியில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு, 1,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவானது. வெப்பம் தொடர்பான நோய்களால் மெக்சிகோவில் 150 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளது.
தீர்வுதான் என்ன?
காலநிலை மாற்றத்தால் மறைமுகமாக இதய நோய்கள், காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுவாச நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பல முக்கிய காரணங்கள் போன்ற கொடிய நோய்களால் உயிர்கள் பறிபோகின்றன.
2024-ஐ திரும்பிப் பார்க்கும்போது, நாம் அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஒரு நாள் நமது கிரகம் மனிதகுலம் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பது நிரூபணமாகிறது.
உலகளாவிய அமைப்புகளும் அரசாங்கங்களும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில் இருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற கடுமையான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதே தீர்வாகும்.