உலகம்

ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Published On 2024-07-20 07:04 GMT   |   Update On 2024-07-20 07:04 GMT
  • அனைத்து பயணிகளுக்கும் போதுமான உணவு, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
  • 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது.

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் (ஏ.ஐ.183) திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்கள் இருந்தனர். இதற்கிடையே ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேறொரு விமானத்தில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மும்பை விமான நிலையத்தில் மாற்று விமானம் (ஏ.ஐ.1179) ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தது. அதில் அனைத்து பயணிகளுக்கும் போதுமான உணவு, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

அந்த விமானம், 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. இது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, ஏ.ஐ.183 விமான பயணிகளுடன் ஏர் இந்தியா மீட்பு விமானம் ஏ.ஐ.1179 கிராஸ்நோ யார்ஸ்கில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது. ரஷியாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கிராஸ்நோயார்ஸ் விமான நிலைய அதிகாரிகள், விமான போக்குவரத்துக்கான ரஷிய கூட்டாட்சி நிறுவனம் பயணிகளுக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News