உலகம்

காங்கோ சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதிகள்: மூச்சுத்திணறல், துப்பாக்கிச் சூட்டில் 129 பேர் பலி

Published On 2024-09-03 12:25 GMT   |   Update On 2024-09-03 12:25 GMT
  • சிறையில் இருந்து ஏராளமான கைதிகள் தப்ப முயன்றனர்.
  • அப்போது மூச்சுத்திணறல், துப்பாக்கிச் சூட்டில் 129 பேர் இறந்தனர்.

கின்ஷாசா:

காங்கோ தலைநகர் கின்ஷாசா அருகே மகலா என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்தச் சிறைச்சாலையில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 1,500 கைதிகள் வரை அடைக்கும் வசதிகொண்ட இந்தச் சிறைச்சாலையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சிறைச்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதை சாதகமாகப் பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்றனர். நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றபோது, கைதிகளுக்கு இடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் கைதிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மூச்சுத்திணறலில் மயக்கமடைந்த கைதிகள் பலரும் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். அதேவேளை, தப்பிச்செல்ல முயன்ற சிறைக்கைதிகள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

சிறையில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 129 கைதிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்தச் சிறைச்சாலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News