உலகம்

பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்

Published On 2023-12-02 07:59 GMT   |   Update On 2023-12-02 08:00 GMT
  • புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் உள்கட்சி தேர்தல் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அறிவித்தது.
  • கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இம்ரான்கான் அறிவித்தார்.

லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவராக உள்ளார். அவர் 2018 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில் அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான்கான் கட்சி தோல்வியைச் சந்தித்து ஆட்சி கலைக்கப்பட்டது. பதவி விலகிய அவர்மீது இதுவரை 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரதமராக இருந்தபோது பரிசுப்பொருள் முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையே, இம்ரான் கான் கட்சியின் சின்னமான 'கிரிக்கெட் மட்டை' சின்னத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள 20 நாளுக்குள் புதிய கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சித் தேர்தலை நடத்துமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியது.

கடந்த திங்களன்று நடைபெற்ற கட்சி காரியக் கமிட்டி கூட்டத்தில் உள்கட்சித் தேர்தல் நடத்த அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்த புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பிடிஐ கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இம்ரான் கானுக்கு பதிலாக அவருக்கு மிகவும் நெருக்கமானவரான பாரிஸ்டர் கோஹர் கான் கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

Tags:    

Similar News