விலங்குகளிடம் பரிசோதனை: எலான் மஸ்க்கின் நிறுவனம் மீது விசாரணை
- நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்குள் ‘சிப்’ பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து பரிசோதனை செய்ய திட்டம்
- பரிசோதனையில் சுமார் 1500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
வாஷிங்டன்:
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், டுவிட்டர், நியூராலிங்க் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார்.
இதில் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்குள் 'சிப்' பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை தொடங்க இருப்பதாக தெரிவித்து இதற்காக 2018-ம் ஆண்டு முதல் நடத்தும் பரிசோதனையில் விலங்குகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இதுவரை பரிசோதனையில் செம்மறி ஆடுகள், பன்றிகள், குரங்குகள் உள்பட சுமார் 1500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நியூராலிங்க் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள், விலங்குகள் கொல்லப்பட்டதை உறுதிபடுத்தினர். விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் அவசர அவசரமாக செய்யப்பட்டதால் விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு உயிரிழப்புகளை சந்தித்தன என்று தெரிவித்தனர்.
பரிசோதனையில் விலங்குகள் கொல்லப்பட்டு இருப்பது விலங்குகள் நலன் மீறல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்கான எலான் மஸ்க்கின் அறிவுறுத்தலால் விலங்குகளின் இறப்பு எண்ணிக்கை தேவையை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விலங்கு நல சட்டத்தின் கீழ் நியூராலிங்க் நிறுவனம் மீது அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எலான் மஸ்க் மற்றும் நியூராலிங்க் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.