உலகம்

காசாவில் தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்- இஸ்ரேல் அறிவிப்பு

Published On 2023-11-10 07:19 GMT   |   Update On 2023-11-10 07:19 GMT
  • ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.
  • பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை.

காசா:

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். தரைப்படையினர் காசாவின் மையப் பகுதிக்குள் நுழைந்து உள்ளனர்.

காசா நகர் மீது இஸ்ரேல் படையினர் மும்முனை தாக்குதல் நடத்தி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களை குறி வைத்து சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதில் ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருவதால் போர் ஒரு மாதத்தையும் கடந்து தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் மனிதாபிமான உதவிகள் அளிக்கும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியது. ஆனாலும் இஸ்ரேல் அதனை நிராகரித்தது. ஹமாஸ் பிடியில் இருக்கும் 239 பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என தெரிவித்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்தம் கொண்டு வருதற்கான முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது.


அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜோபைடன் காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த பகுதியில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று தினமும் 4 மணி நேரம் காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்து உள்ளது.

அதன்படி காசாவில் 4 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து போர் நடந்து வரும் வடக்கு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தெற்கு பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். நடந்தும், கழுதை வண்டிகள் மூலமாகவும் அவர்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் சில மணி நேரங்களில் சண்டை நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல நாங்கள் விரும்புகிறோம். மனிதாபிமான உதவிகளை நாங்கள் ஊக்குவித்து அதை செயல்படுத்தி வருகிறோம். இஸ்ரேல் ராணுவம் சிறப்பாக செயல்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் காசவை ஆள முயலவில்லை. பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை. சிறந்த எதிர்காலத்தை வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் காசாவில் உள்ள 3 பெரிய ஆஸ்பத்திரிகள் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News