உலகம்

எர்டோகன் உரை எதிரொலி: பின்னடையும் இஸ்ரேல்-துருக்கி உறவு

Published On 2023-10-29 06:46 GMT   |   Update On 2023-10-29 06:46 GMT
  • லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் எர்டோகன் உரையாற்றினார்
  • இரு நாட்டு உறவு மறுபரிசீலனை செய்யப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது

தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்ற ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து காசா பகுதி முழுவதும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரக்கும் பல உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், துருக்கி நாட்டு அதிபர் டாயிப் எர்டோகன் (Tayyip Erdogan), அந்நாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுமார் 15 லட்சம் பேர் நடத்திய ஒரு பேரணியில் உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

காசாவில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும், படுகொலைகளுக்கும் மேற்கத்திய நாடுகளே காரணம். இஸ்ரேலும், கிறித்துவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக மாற்றியுள்ளது. மேற்கத்திய நாடுகளை ஒன்று கேட்க விரும்புகிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நடந்தது போல் மீண்டும் இரு மதத்தினருக்கிடையே (பிறை-சிலுவை போர்) சச்சரவு நிகழ வேண்டுமா? மத்திய தரை கடல் பகுதியில், இஸ்ரேல் நாட்டை மேற்கத்திய நாடுகள் தங்கள் அதிகார ஆட்டத்திற்கு ஒரு பகடைக்காயாக மாற்றி விட்டன. இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடாக மாறி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து, துருக்கியில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், இஸ்ரேல்-துருக்கிக்கான இரு நாட்டு உறவு மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

சுமார் பத்தாண்டு காலம் சீரற்று இருந்த இஸ்ரேல்-துருக்கி பொருளாதார மற்றும் அரசியல் உறவு, சமீபத்தில்தான் சுமூக நிலைமையை அடைந்தது. இந்நிலையில், இந்த சம்பவம், இரு நாட்டு உறவுக்கு ஒரு பின்னடைவாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News