தீர்ப்பை வாசிக்கும் நீதிபதியை பாய்ந்து தாக்கிய குற்றவாளி
- 62 வயதான பெண் நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்
- நீதிமன்ற மார்ஷல் ஒருவர் காயத்திற்கு சிகிச்சை பெறுகிறார்
லாஸ் வேகாஸ் நகரில், ஓரு தாக்குதல் வழக்கில் கைதானவர் டியோப்ரா ரெட்டன் (30).
உடல் ரீதியான கடுமையாக தாக்குதல் நடத்தியதற்காகவும், அத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான உடல் சீர்கேடு உருவானதாலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிவேடா நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
விசாரணை நிறைவுற்ற நிலையில், நீதிபதி மேரி கே ஹால்தஸ் எனும் 62 வயதான பெண் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
ரெட்டன் தன் குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு சிறை தண்டனை வழங்கும் தனது தீர்ப்பை நீதிபதி படித்து கொண்டிருந்தார். ரெட்டனின் வக்கீல் தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை எழுப்பிய போது, அதனை நீதிபதி மேரி மறுத்தார்.
இதில் கடுமையாக கோபம் கொண்ட ரெட்டன், நீதிபதி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் உள்ள மேசையின் மீது அவரை அடிக்க பாய்ந்தார். அந்த மேசையில் இருந்த கொடி சின்னங்கள் கீழே விழுந்தன. இதையடுத்து அங்குள்ளவர்களில் 3 பேர் ரெட்டனை மடக்கி பிடித்தனர்.
காயங்கள் ஏதும் இல்லையென்றாலும் நீதிபதி மேரியின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்ற மார்ஷல்கள் எனப்படும் பாதுகாவலர்களில் ஒருவருக்கும் இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் முழுவதும் நீதிமன்ற கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முன்னர் பதிவாகியிருந்த தாக்குதல் வழக்குகளுடன் இந்த வழக்கும் ரெட்டன் மீது பதிவாகியுள்ளது.
கட்டுப்பாடுகளுக்கு பெயர் பெற்ற அமெரிக்காவில், நீதிமன்றத்திலேயே ஒரு பெண் நீதிபதி மீது நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது.