உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்புக்கு போட்டியாக களமிறங்கிய நிக்கி ஹாலே

Published On 2023-02-14 19:49 IST   |   Update On 2023-02-14 19:49:00 IST
  • கடந்த முறை ஜோ பைடனிடம் தோல்வியடைந்த டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்
  • நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக அறிவித்ததும், அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக முன்னாள் மாகாண கவர்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியுமான நிக்கி ஹாலே (வயது 51) இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்க உள்ளதாக கூறி உள்ளார்.

'குடியரசு கட்சியினர் கடந்த 8 அதிபர் தேர்தல்களில் 7-ல் மக்கள் வாக்குகளை இழந்துள்ளனர். இது மாற்றப்பட வேண்டும். ஜோ பைடனின் சாதனை படுமோசமானது. ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எனவே வரும் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நமது நாட்டை, வலுப்படுத்தவும் புதிய தலைமுறை தலைமையேற்கும் நேரம் இது' என்றும் நிக்கி ஹாலே கூறி உள்ளார்.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 76) ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் கடந்த முறை அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆதரவு திரட்டி வருகிறார். தற்போது நிக்கி ஹாலேவும் அறிவித்துள்ளதால், குடியரசு கட்சியின் வேட்பாளர் யார்? என்பதில் இவர்கள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி உள்ளது.

குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்பை எதிர்த்து நிக்கி ஹாலே இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலில் நுழைவதற்கு முன், அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் நிக்கி ஹாலே வெற்றி பெற வேண்டும். அதன்பிறகே அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News