உலகம்

மொரோக்கோ நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1300ஐ கடந்தது

Published On 2023-09-10 00:00 GMT   |   Update On 2023-09-10 00:00 GMT
  • சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன.
  • இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.\

ரபாட்:

வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மொரோக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது என தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.

வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களும் சேதமடைந்தன.

இந்நிலையில், மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளது. மேலும் 1800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News