உலகம்

லிபியாவை பந்தாடிய புயல்-வெள்ளம்: 2 ஆயிரம் பேர் பலி

Published On 2023-09-12 05:56 GMT   |   Update On 2023-09-12 05:56 GMT
  • அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  • டெர்னா நகரில் 2 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கானோரை காணவில்லை

திரிபோலி:

வட ஆப்பிரிக்க நாடான லிபியா, மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் மத்திய தரைக்கடலில் உருவான 'டேனியல்' என்று பெயரிடப் பட்ட சூறாவளி புயல், லிபியாவில் கிழக்கு பகுதியை கடுமையாக தாக்கியது.

அங்குள்ள கடற்கரை நகரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஊருக்குள் வெள்ளம் புகுந்து ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. வீடு, வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. டெர்னா, சூசா, பாய்தா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட நகரங்களில் புயலின் தாக்கம் கடுமையாக உள்ளது. குறிப்பாக டெர்னா நகரில் பெரும் இழப்பு ஏற்பட் டுள்ளது. அந்த நகரம் பேரழிவு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லிபியா கிழக்கு பகுதியில் புயல், கனமழை, வெள்ளத்தில் சிக்கி 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக பிரதமர் ஒசாமா ஹமாட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "டெர்னா நகரில் 2 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கானோரை காணவில்லை" என்றார்.

மேலும் ஆயுதப்படைகளின் செய்தித்தொடர்பாளர் அஷ்மத் அல்-மோஸ்மரி கூறும்போது, "5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை காணாமல் போய் உள்ளனர்" என்று கூறினார்.

கனமழை காரணமாக இரண்டு அணைகள் நிரம்பி இடிந்து விழுந்துள்ளது. இதனால் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.

பல கடலோர நகரங்களில் பெரும் பகுதிகள் அழிந்துள்ளன. இந்த பேரழிவு காரணமாக 3 நாட்கள் துக்கம் அனுசரித்து நாடு முழுவதும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு போர் நடந்து வரும் லிபியாவில் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News