அமெரிக்காவில் குருத்துவாராவில் துப்பாக்கி சூடு - 2 பேர் படுகாயம்
- அமெரிக்காவில் உள்ள குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
- தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்து இருக்கலாம் எனவும் செல்ரோ மெண்டரோ போலீசார் தெரிவித்து உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அடிக்கடடி நடந்து வரும் துப்பாக்கி சூட்டிற்கு ஏராளமானோர் பலியாகி விட்டனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 44 ஆயிரம் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அங்குள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள்.
அவர்கள் அங்குள்ள சீக்கிய கோவிலான குருத்துவாராவுக்கு செல்வது வழக்கம். நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான சீக்கியர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.
அப்போது 3 மர்ம மனிதர்கள் குருத்துவாராவுக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தனர். திடீரென அவர்கள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டனர். இதில் குண்டு பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்க வில்லை. இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் காரணம் இல்லை என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்து இருக்கலாம் எனவும் செல்ரோ மெண்டரோ போலீசார் தெரிவித்து உள்ளனர்.