உலகம்

ஆப்கானிஸ்தான் ஓட்டலில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2022-12-13 05:08 GMT   |   Update On 2022-12-13 05:08 GMT
  • தாக்குதலின் போது பயங்கரவாதிகள் 2 பைகளில் வெடிபொருட்களை ஓட்டலுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர்.
  • சீனர்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷார்-இ-நவ் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே பயங்கரவாத கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை சுட்டுக் கொன்றனர்.

சீனர்கள் வழக்கமாக தங்கும் விடுதி அருகே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும் போது, 'தாக்குதலின் போது பயங்கரவாதிகள் 2 பைகளில் வெடிபொருட்களை ஓட்டலுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர். சீனர்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த தலிபான் அதிகாரிகள் மீதும் கையெறி குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர்.

ஓட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டினர் பயத்தில் அலறினர். தப்பிக்க நினைத்து பால்கனியில் இருந்து குதித்த 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

இந்த பயங்கரவாத தாக்குதல் சீன தூதர் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு மந்திரியுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்திய மறுநாள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News