இஸ்ரேல் காசா போர்.. 44 ஆயிரம் பேர் உயிரிழப்பு! என்று தணியும் இரத்த தாகம்?
- கடந்த 13 மாதங்களாக மோதல் நடைபெற்று வருகிறது.
- பலரின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்க கூடும்.
ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதோடு, இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் காசா முனைக்கு கடத்திச் சென்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 13 மாதங்களாக மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 44 ஆயிரத்து 056 பேர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 04 ஆயிரத்து 268 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த பலரின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்க கூடும் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரில் இதுவரை ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக காசா இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
சர்வதேச அரசியல், நீண்ட கால முரண்கள் என பல்வேறு காரணங்களை கூறி தாக்குதல் நடத்துவது, தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மற்றும் போர் என்ற பெயரில் அப்பாவி உயிர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படுவது உலக அமைதியை சீர்குலைத்து வருகிறது.
அந்த வகையில் போரின் போர்வையில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்தது சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு இருப்பது இருதரப்பு போரின் தீவிரத்தன்மையை குறைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.