நிஜ்ஜார் கொலையில் மோடியை தொடர்புபடுத்துவதா? கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனம்
- அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.
- தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா:
கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதை இந்தியா திட்ட வட்டமாக மறுத்தது. இவ் விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று கனடா தெரிவித்தது. அதன்பின் இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதி செயல் குறித்து இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரியும் என்று கனடா ஊடகமான தி குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
பெயர் தெரிவிக்காத கனடா மூத்த தேசிய பாது காப்பு அதிகாரியை மேற் கோள் காட்டிவெளியிடப் பட்ட அந்த செய்தியில், இந்த சதித்திட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளி விவகார அமைச்சர் ஆகியோரும் இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறிய தாவது:-
நாங்கள் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும் கனடா அரசாங்கம் ஆதாரம் இல்லா மல் ஒரு செய்தித்தாளில் கூறப்படும் இது போன்ற கேலிக்குரிய அறிக்கைகளை நிராகரிக்க வேண்டும்.
இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்கள் ஏற்கனவே சிதைந்து விட்ட இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்துகின்றன என்றார்.