உலகம்

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் கைது செய்யப்பட்டு அமெரிக்கா சிறையில் அடைப்பு

Published On 2024-11-21 07:21 GMT   |   Update On 2024-11-21 07:21 GMT
  • அன்மோல் குறித்து தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.
  • 2022-ம் ஆண்டு அன்மோல் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் மாநில மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் ஈடுபட்டதாக போலீசார் அவரை தேடிவந்தனர்.

அவர் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அமெரிக்கா அவரை கைது செய்ததாக தகவல் வெளியானது. என்.ஐ.ஏ. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.

ஆனால் அமெரிக்கா அவரை கைது செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அன்மோல் கைது செய்யப்பட்டு அயோவா மாகாணத்தில் உள்ள பொட்டாவட்டமி கவுன்ட்டியில் (Pottawattamie County) உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டதை தவிர மற்ற விரிவான தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

பாலிவுட் நடிகர் வீட்டிற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அன்மோல் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அன்மோல் குறித்து தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.

வாரத் தொடக்கத்தில் அன்மோலை நாடு கடுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை எந்த தகவலையும் வெளியிட மறுத்தது. இது உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் எஃப்.பி.ஐ. அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனத் தெரிவித்தது.

இவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், நிதி சேர்த்தல் தொடர்பாக 2022-ம் ஆண்டு அன்மோல் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News