உலகம்

மகனுக்கு 'பொது மன்னிப்பு' வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. கொந்தளித்த டிரம்ப் - சொன்னது இதுதான்

Published On 2024-12-02 07:20 GMT   |   Update On 2024-12-02 07:20 GMT
  • பொது மன்னிப்பு மூலம் குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியும்.
  • என் மகன் மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நடந்த போதும் நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன்

நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்த அமரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜோ பைடன் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த ஜனவரியுடன் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைகிறது.

பதவியேற்கும் முன்பே டிரம்ப் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறார். இதற்கிடையே பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடனும் கடைசியாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை செயல்படுத்தி வருகிறார்.

ரஷியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கி ஜோ பைடன் திடீர் அதிரடி காட்டினார். இந்நிலையில் கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் ஹண்டர் பைடனுக்கு ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

 

ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் [54 வயது] சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கிலும், பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்த வழக்கிலும் சிக்கியுள்ளார். இதற்கிடையே தனது போதைப் பழக்கத்தில் இருந்தும் அவர் மீண்டு வருகிறார்.

அமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் பொது மன்னிப்பு மூலம் குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியும். ஆனால் தனது மகனுக்கு அவ்வாறு மன்னிப்பு வழங்கமாட்டேன் என ஜோ பைடன் கூறி வந்த நிலையில் தற்போது அதற்கு மாறாக ஹண்டர் பைடனுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

 

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இன்று, என் மகன் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கி கையெழுத்திட்டேன். நான் பதவியேற்ற போது நீதித்துறையின் முடிவுகளில் தலையிட மாட்டேன் என்று கூறியிருந்தேன், அதை இதுநாள் வரை காப்பாற்றி வந்துள்ளேன்.

என் மகன் மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நடந்த போதும் நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மகன் என்ற ஒரே காரணத்தால் ஹண்டர் மீது விசாரணை நடந்துள்ளது. என் மகனை வைத்து எனது செயல்பாடுகளை நிறுத்த முயற்சி நடந்தது. எனவே தற்போது மன்னிப்பு வழங்கியுள்ளேன் என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். 

 தனது மகன் சிறைக்குச் செல்வதிலிருந்து ஜோ பைடன் காப்பாற்றி உள்ள நிலையில் அடுத்து அதிபராகப்போகும் டிரம்ப் இதை விமர்சித்துள்ளார். நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

 

மேலும் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கியதுபோல் 2021 இல் டிரம்ப் ஆட்சியை இழந்தபோது வெள்ளை மாளிகை பகுதியில் போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சேர்த்து பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டிரம்ப் பாலியல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் பதவியேற்றதும் தனக்குத் தானே பொது மன்னிப்பு வழங்கிக்கொள்வார் என்ற கருத்தும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News