உலகம்

பிரேசிலில் துப்பாக்கிகளை பயன்படுத்த மக்களுக்கு கடும் கட்டுப்பாடு- அதிபர் அதிரடி உத்தரவு

Published On 2023-07-22 06:30 GMT   |   Update On 2023-07-22 06:30 GMT
  • குடிமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
  • புதிய விதிகள் மூலம் துப்பாக்கிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை காவல் துறைக்கு செல்கிறது.

பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்து கொள்ள அனுமதி உள்ளது.

இந்த நிலையில் பிரேசிலில் பொதுமக்கள் துப்பாக்கிகளை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதற்கான உத்தரவுகளை அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா பிறப்பித்துள்ளார்.

அதன்படி பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்திருக்கக் கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கை நான்கில் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துப்பாக்கிக்கும் அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகள் 200-ல் இருந்து 50 ஆக குறைகிறது. மேலும் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை நிரூபிக்கும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்கள், 9 மி.மீ. பிஸ்டல்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிபர் லுலாடா சில்வா கூறும் போது, குடிமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக வீட்டில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை அவர்கள் வைத்திருக்கட்டும். ஆனால் துப்பாக்கிகள் மக்களின் கைகளில் அதிகமாக இருப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

ஆயுதமற்ற நாட்டிற்காக தொடர்ந்து போராடுவோம். பிரேசில் காவல் துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகள்தான் துப்பாக்கிகளை கையாள்வதில் நன்கு பொருந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.

புதிய விதிகள் மூலம் துப்பாக்கிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கை காவல் துறைக்கு செல்கிறது. முன்பு இது ராணுவம் வசம் இருந்தது. கடந்த மே மாதம் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை காவல் துறையில் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி பயிற்சி மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் பள்ளிகளில் இருந்து குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News