உலகம்

பிரான்சில் தொடரும் கலவரம்: மேயர் வீடு மீது காரை மோத விட்டு தாக்குதல்- மனைவி, குழந்தை காயம்

Published On 2023-07-03 05:21 GMT   |   Update On 2023-07-03 05:35 GMT
  • போராட்ட காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 24 போலீசார் காயம் அடைந்தனர்.
  • மேயரின் மனைவி, மற்றும் அவரது குழந்தை காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், புறநகர் பகுதியான நான்டென் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காரை ஓட்டி சென்ற நகேல் என்ற 17 வயது ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த சிறுவன் இறந்தான்.

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பிரான்சில் பல நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. கார்கள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள், குப்பைத்தொட்டிகள் போன்றவை தீ வைக்கப்பட்டது.கடைகள் சூறையாடப்பட்டது. பாரீசில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்தல், கடைகளை அடித்து நொறுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் முழுவதும் 6-வது நாளாக இந்த கலவரம் நீடித்து வருகிறது. போராட்ட காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 24 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பாரீசில் உள்ள ஹேலெஸ் ரோச்சின் மேயர் வின்சென்ட் ஜீன்ப்ரூன் இல்லத்தில் போராட்டக்காரர்கள் நேற்று தாக்குதலில் ஈடுபட்டனர். தீப்பற்றி எரியும் காரை போராட்டக்காரர்கள் ஓட்டிச்சென்று மேயர் இல்லத்தில் மோத விட்டனர். இதில் மேயரின் மனைவி, மற்றும் அவரது குழந்தை காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,இது கோழைத்தனமான தாக்குதல் என மேயர் வின்சென்ட் ஜீன்ப்ரூன் தெரிவித்து உள்ளார்.

பிரான்சில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பிரான்சில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்து பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கும்பல் அங்கிருந்து கடைகளை சூறையாடினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News