உக்ரைனை தாக்கியது ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணை: வான் பாதுகாப்பு சிஸ்டத்தால் ஒன்னும் செய்ய முடியாது- புதின்
- கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்
- அதேவேளையில் மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் என்ற புதிய ஏவுகணை மூலம் நடத்தியதாக புதின் சொல்கிறார்
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷியா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது.
இவ்வாறு செய்தி வந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் பகுதி மீது செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றிகரமாக அமைந்தது என புதின் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணைக்கு ஒரேஷ்னிக் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரேஷ்னிக் அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்டது. நொடிக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. நவீன ஏர் பாதுகாப்பு சிஸ்டங்கள் கூட இதை தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. இன்றைய நிலவரப்படி, இந்த ஏவுகணையை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை என புதின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவை நோக்கி நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஒரேஷ்னிக் சோதனை எனத் தெரிவித்துள்ளார்.