உலகம்

காசா நகருக்குள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் ஹமாஸ் நேருக்கு நேர் மோதல்

Published On 2023-10-28 06:37 GMT   |   Update On 2023-10-28 06:37 GMT
  • ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
  • காசா நகரமே தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.

காசா:

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 22 நாட்களை கடந்து விட்டது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் சபதம் ஏற்றுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் இது வரை 1,405 பேர் பலியாகி விட்டனர். இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் 7,326 பேர் இறந்து விட்டனர். பாலஸ்தீன மேற்கு பகுதியில் நடந்த மோதலில் 107 பேர் உயிர் இழந்து விட்டனர்.

இதில் பெரும்பாலானோர் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள். இந்த போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,838 ஆக அதிகரித்து உள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

காசா பகுதியில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் படையினர் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. காசாவின் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளில் போர் விமானங்கள் சரமாரியாக காசா நகரில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

நேற்று இரவு விடிய, விடிய குண்டுகளை வீசியது. வானில் இருந்து தீப்பந்துகள் விழுவது போல குண்டுகள் வெடித்தது. இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி விட்டன. இதில் பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

காசா நகரமே தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.

வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல் தற்போது தரை வழியாகவும் தாக்க தொடங்கி உள்ளது. காசா எல்லையில் முற்றுகையிட்டுள்ள தரை படை பீரங்கிகள் காசாவின் புற நகர் பகுதிக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்புகளின் இலக்குகளை குறிவைத்து தாக்கியது. பின்னர் அவர்கள் தங்களது நிலைக்கு திரும்பி வந்ததனர். காசா நகருக்குள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் இஸ்ரேல் வீரர்களுடன், தங்கள் போராளிகள் மோதலில் ஈடுபட்டதாக ஹமாஸ் தெரிவித்து உள்ளது. மேலும் இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்த போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படையை முழு பலத்துடன் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அவர்கள் ஊடுருவலை முறியடிக்க முற்றிலும் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதனால் இந்த சண்டை மேலும் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் உச்சக்கட்டம் அடைந்துள்ள சூழ்நிலையில் காசாவில் தொலை தொடர்பு துறை சேவைகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக காசாவில் உள்ள பொதுமக்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். காசா பகுதி வெளி உலக தொடர்பில் இருந்து முழுவதும் துண்டிக்கபட்டு உள்ளது. இதனால் காசாவில் என்ன நடக்கிறது என்பது எதுவுமே தெரியவில்லை. தங்களது பணியாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்து இருக்கிறது.

Tags:    

Similar News