இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு பதில் 1 லட்சம் இந்தியர்களை பணி அமர்த்த முடிவு
- வேலை வாய்ப்பு கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திருத்தம் கொண்டு வந்து மாற்றி அமைத்தது.
- ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்அவிவ்:
இஸ்ரேல்- ஹமாஸ் படை இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதால் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேறும் படி அந்நாடு உத்தரவிட்டது.
இஸ்ரேலில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பணியாற்றி வருகின்றனர். போர் தொடங்கியதும் இவர்களின் பணி உரிமத்தை இஸ்ரேல் ரத்து செய்து விட்டது. உடனடியாக அங்கு வேலை பார்த்து வந்த பாலஸ்தீனர்கள் வெளியேறிவிட்டனர்.
இதையடுத்து வேலை வாய்ப்பு கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திருத்தம் கொண்டு வந்து மாற்றி அமைத்தது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கட்டுமான பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இஸ்ரேல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இஸ்ரேலிடம் இருந்து ராணுவ படைகளுக்கான ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. இப்படி இந்தியாவுடன் நட்புணர்வோடு திகழ்ந்து வரும் இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனர்களுக்கு பதில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதால் இருதரப்புக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் நிலை உருவாகி இருக்கிறது.