உலகம்

காசாவுக்குள் புகுந்து பீரங்கி தாக்குதல் தொடரும்- இஸ்ரேல் ராணுவம் தகவல்

Published On 2023-10-27 06:47 GMT   |   Update On 2023-10-27 06:47 GMT
  • இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் காசா எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.
  • அமெரிக்க ராணுவ வீரர்கள் 900 பேர் மத்திய கிழக்கு பகுதிக்கு சென்றடைந்துள்ளனர்.

டெல்அவிவ்:

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசா பகுதி மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவுக்குள் தரை வழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. காசா எல்லையில் ராணுவ டாங்கிகள் அணிவகுத்து நிற்கின்றன. 3 லட்சம் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் காசா எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பின. ஹமாசின் 250 நிலைகளை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர் பலர் கொல்லப்பட்டதாகவும் தாக்குதல் நடத்திவிட்டு பீரங்கிகள் மீண்டும் இஸ்ரேல் எல்லைக்குள் திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இது தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை என்றும் இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் விரைவில் தரைவழித் தாக்குதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காசாவுக்குள் புகுந்து பீரங்கி தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகார் கூறும் போது, ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் அடுத்த கட்ட போருக்கு தயாராவதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வரும் நாட்களில் காசாவில் பீரங்கி தாக்குதல்களை தொடரும்.

ஹமாஸ் அமைப்பினரை கொல்வதும், முழுப்படையெடுப்புக்கு அடித்தளமிடுவதும், வெடிக்கும் சாதனங்கள், உளவுத் தளங்களை நடுநிலையாக்குவதும் இஸ்ரேல் தரைப்படை நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

வான் மற்றும் கடலில் இருந்து காசா மீது தாக்குதல் தொடர்ந்து வருகிறது. மூத்த ஹமாஸ் தளபதிகளை கொல்வதிலும், ஹமாஸ் உள்கட்டமைப்பை அழிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோசவ் கல்லன்ட் கூறும்போது, ஹமாசுக்கு எதிரான போரில் அடுத்த கட்டங்களுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. நிலைமைகள் சரியாக இருக்கும் போது தரைவழி தாக்குதல் தொடங்கும் என்றார்.

காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் 21-வது நாளாக தொடர்கிறது. நேற்று இரவு காசா மீது குண்டுகள் வீசப்பட்டன.

இதற்கிடையே காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்று அடைய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இப்போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் உள்ளது.

இந்த நிலையில் கிழக்கு சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய குழுக்களின் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் புரட்சிகர காவலர் படையின் இரண்டு இடங்களை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே அமெரிக்க ராணுவ வீரர்கள் 900 பேர் மத்திய கிழக்கு பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா தனது இரண்டு போர்க் கப்பல்களை மத்திய தரை கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News