பெண்களுக்கு தடை- ஐ.நா. உதவி தலைவர் ஆப்கானிஸ்தான் செல்கிறார்
- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
- ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் உச்சக்கட்டமாக ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் வெளிநாட்டு நிறுவனங்களிலும் பெண்கள் வேலை பார்க்கவும் தலிபான் அரசு தடை செய்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலிபான்களின் இந்த அதிரடி உத்தரவால் கிட்டத்தட்ட தங்களுடைய அனைத்து வேலைகளையும் தன்னார்வ அமைப்புகள் நிறுத்தி விட்டன. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. சபையின் உதவித்தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் செல்ல உள்ளார்.
அவர் தலிபான் அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து பெண்களுக்கு விதிக்கபட்டுள்ள தடை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.