அரச குடும்பத்தை விமர்சித்தவருக்கு 50 வருடங்கள் சிறை
- 3 வருடங்களுக்கு முன் ஃபேஸ்புக் கணக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்
- முதலில் திரகோட்டிற்கு 28 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ளது, சியாங் ராய் (Chiang Rai) பிராந்தியம். அங்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அரச குடும்பத்தை சேர்ந்தவருக்கும் ஆட்சியமைப்பில் பங்கு உண்டு.
தற்போது மஹா வஜிரலாங்கோர்ன் (Maha Vajiralongkorn) அரசராக உள்ளார்.
இப்பிராந்தியத்தில் ஆடைகள் விற்பனை தொழில் புரிந்து வந்தவர், மோங்கோல் திரகோட் (Mongkol Thirakot).
திரகோட், 3 வருடங்களுக்கு முன் தனது ஃபேஸ்புக் கணக்கில், அந்நாட்டின் அரச பரம்பரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
அரச குடும்பத்தை குறித்த அவதூறு பரப்புதல் "லெஸ் மெஜஸ்டெ" (lese majeste) எனும் குற்றமாக அந்நாட்டில் கருதப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
திரகோட் மீது இக்குற்றப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அங்கு அவருக்கு 28 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார், திரகோட்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், திரகோட்டிற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 28 வருட தண்டனையுடன், மேலும் 22 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டு, அவரது தண்டனை காலம் 50 வருடமாக அதிகரிக்கப்பட்டது.
திரகோட்டின் விமர்சனம் குறித்த முழு விவரங்கள் தற்போது தெரியவில்லை. ஆனால், அவர் பதிவிட்டிருந்த ஓவ்வொரு விமர்சனத்திற்கும் தண்டனை அதிகரிக்கப்பட்டு, தற்போது 50 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கருதப்படும் "லெஸ் மெஜஸ்டெ" சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டாலும், அதை மாற்றவோ, நீக்கவோ முயன்றால் நாட்டின் அரசியலமைப்பு சிதைந்து விடும் என அந்நாட்டின் பழமைவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்.