உக்ரைன் தாக்குதல்: ரஷ்ய ராணுவ குழுவில் கேரள வாலிபர் பலி
- இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
- இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இதையடுத்து அந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது.
இரு நாட்டு வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யா ராணுவத்தில் இருந்த கேரள வாலிபர் பலியாகி இருக்கிறார்.
அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் திருச்சூர் நாயரங்கடி பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் சந்தீப்(வயது36). இவர் உள்பட 7 பேர் கடந்த ஏப்ரல் மாதம் சாலக்குடியில் இருந்து ஒரு ஏஜென்சி மூலமாக ரஷ்யாவுக்கு வேலைக்கு சென்றனர். அங்கு சென்ற சந்தீப் மாஸ்கோவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்வதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்பு ரஷ்ய ராணுவ முகாமில் உள்ள கேண்டீனில் வேலை பார்ப்பதாகவும், அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ ரோந்து குழுவுடன் சந்தீப் சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நடத்திய தாக்குதலில் அந்த குழுவில் இடம் பெற்றிருந்த 12 பேரும் கொல்லப்பட்டனர்.
அவர்களுடன் சந்தீப்பும் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.
ராணுவ முகாமில் உள்ள கேண்டீனில் வேலை பார்த்ததாக கூறப்பட்ட சந்தீப், ராணுவ குழுவில் இணைந்தது எப்படி? என்பது தெரியவில்லை. ரஷ்யாவில் குடியுரிமை பெற ராணுவத்தில் சேரும் முறை இருக்கிறது. அதற்காக அவர் ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. சந்தீப் ரஷ்ய குடியுரிமை பெற்றிருந்தால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதில் பிரச்சினை ஏற்படும். அதே நேரத்தில் இந்திய தூதரகம் தலையிட்டு சந்தீப் உடலை கேரளாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.