அமெரிக்க ஏவுகணையால் சீண்டிய உக்ரைன் - அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் புதின் - 1000 வது நாளில் அதிரடி
- நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது.
உக்ரைன் போர்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மேற்கு நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.
1000 வது நாள்
நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு கட்டுப்பாடு இருந்த நிலையில் அதை ஜோ பைடன் தளர்த்திய நிலையில் நேற்றைய தினம் ரஷியா மீது முதல் முறையாக பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
Bryansk
நேற்று இரவு ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் இருந்த ராணுவக் கிடங்கை தங்களின் ஏவுகணை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை குறித்து பேசியுள்ள ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவால் வழங்கப்பட்ட 5 ATACMS ஏவுகணைகள் ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] வான்பகுதிக்குள் வந்ததாகவும் அவற்றை தாங்கள் அழித்ததாகவும், அதில் ஒரு ஏவுகணையின் சேதமடைந்த பாகங்கள் ராணுவ தளவாடம் அருகே விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் எந்த உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
உலகப் போர்
முன்னதாக உக்ரைன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா உத்தரவிட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது. மேலும், உக்ரைனுக்கு இந்த அனுமதியை அளித்ததன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் நேரடியாக தங்களுடன் மோதுவதாக ரஷியா கருதும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போர் தொடங்கி நேற்றைய 1000 வது நாளில் ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத பயன்பாட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளார்.
அணு ஆயுத கொள்கை
இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.
இந்த உத்தரவுக்கு வெளிவந்த அதே நாளிலேயே உக்ரைன் பாலிஸ்டிக் தாக்குதல் நடத்தி ரஷியாவை சீண்டியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன்படி ரஷியா அணு ஆயுத்தங்களை பயன்படுத்தினால் அது மனித குல வரலாற்றின் மீது மேலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.