உலகம்

தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி - அச்சத்தில் அகதிகள்

Published On 2023-11-23 11:35 GMT   |   Update On 2023-11-23 11:35 GMT
  • அகதிகளின் செலவிற்காக டச்சு குடும்பங்கள் துன்பத்தில் வாழ்கின்றனர் என்றார் கீர்ட்
  • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முற்றிலும் வெளியேற விரும்புகிறார் கீர்ட்

ஐரோப்பிய கண்டத்தின் வடமேற்கில் உள்ள இயற்கை அழகு மிக்க நாடு நெதர்லாந்து (Netherlands). இதன் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் (Amsterdam).

நெதர்லாந்தில் சில நாட்களுக்கு முன் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

அதில் "சுதந்திரத்திற்கான கட்சி" (PVV) எனும் வலதுசாரி கட்சி, 150 இடங்களில் 37 இடங்களை வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) மேலும் இரு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார்.

"வாக்காளர்கள் தங்கள் எண்ணங்களை உரத்த குரலில் கூறி உள்ளனர். அவர்களின் நம்பிக்கை எக்காரணம் கொண்டும் வீண் போகாது. கூட்டணி குறித்து விரைவில் ஒரு சமரச முடிவு எட்டப்படும். நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். 'தங்களின் நாடு தங்கள் வசமே மீண்டும் வரும்' என இனிமேல் டச்சு மக்கள் உறுதியுடன் இருக்கலாம். சுனாமி போல் நம் நாட்டிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையும், அனுமதியின்றி நம் நாட்டிற்குள் நுழைந்து புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் இனி படிப்படியாக குறைந்து விடும்" என தனது வெற்றி குறித்து கீர்ட் வைல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல் சித்தாந்தத்தில் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் போன்று கருதப்படும் வைல்டர்ஸின் வெற்றி விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

அவரது கட்சி, இஸ்லாமியர்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பிற்கும் எதிராக பார்க்கப்படுவதால், அவர் வெற்றி பெற்றதனால், நாட்டின் எல்லைகளை அகதிகளுக்கு மூடுவதும், ஆவணங்கள் இல்லாமல் அந்நாட்டிற்குள் வசித்து வரும் புலம் பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதும் இனி நடக்க தொடங்கும் என நம்பப்படுகிறது.

நெதர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக தள்ளப்படலாம் என இஸ்லாமிய அமைப்புகள் அஞ்சுகின்றன.

தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, "அகதிகளாக புகலிடம் கோரி வருபவர்களும், சட்டவிரோதமாக குடியேறியவர்களும் சொகுசு கப்பலில் கிடைப்பதை போன்ற சுகங்களை அனுபவித்தும், உணவுகளை உண்டும் மகிழ்கின்றனர். ஆனால், இவர்களுக்கு அரசாங்கம் செலவு செய்ய டச்சு குடும்பங்கள் தங்கள் மளிகை மற்றும் இதர அத்தியாவசிய செலவுகளையும் குறைத்து வாழ வேண்டி உள்ளது" என கீர்ட் குற்றம் சாட்டி வந்தார்.

தேர்தலில் வென்றால், இஸ்லாமிய பள்ளிகள், மசூதிகள், முகத்தை மூடும் உடைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை போல், நெதர்லாந்தும் வெளியேறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கீர்ட் கூறி வந்தார்.

கீர்ட்டின் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றியை கண்டு பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சித்தாந்தங்களை அவரை போலவே வகுக்க தொடங்கலாம் என அரசியல் நிபுணர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News