2023 ரீவைண்ட்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
- ஜூன் 13-ந்தேதி பலமணி நேரம் விசாரணைக்குப்பின் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
- ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஜூன் 13-ந்தேதி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில், விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார். இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் காவேரி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததும் ஜூன் 21-ந்தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிட்டார்.
என்னுடைய பரிந்துரை இல்லாமல் அமைச்சரை சேர்க்கவே, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.
அறுவை சிகிச்சை முடிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பிறகு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.
செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டடு. ஆனால் மூன்று நீதிமன்றங்களும் ஜாமின் வழங்க மறுத்திவிட்டன. இதனால் தொடர்ந்து புழல் ஜெயலில் இருந்து வருகிறார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இரண்டு முறை உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஜெயலில் அடைக்கப்பட்டார்.