2023 ரீவைண்ட்: முடிவுக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்
- அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
- பின்னர் பொதுச் செயலாளராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர்களாவும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதனால் 2022 ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த தீர்மானங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் அவரை பொதுச் செயலாளராக அங்கீகரிக்காமல் இருந்து வந்தது.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது என ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 20-ந்தேதி அதிமுக-வின் பொதுச் செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களையும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளையும் ஏற்றுக் கொண்டது.