2023 ரீவைண்ட்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
- சுமார் ஒன்றரை கோடி பேர் விண்ணப்பம்.
- முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண் ஆயிரம் ரூபாய் பெற்றனர்.
2021 சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்திருந்தது.
திமுக அளித்திருந்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.
அதை நடைமுறைப் படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்றன. பின்னர் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் முதன்முதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, குடும்பத் தலைவிகள் பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். சுமார் ஒன்றரை கோடி குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு, இந்த திட்டத்தை செப்டம்பர் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது பலரது பெயர் விடுபட்டதாக விமர்சனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு, மேலும் பலர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டனர். அதன் பலனடைவோர் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து, 84 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10-ந்தேதிக்கு மேல் 15-ந்தேதிக்குள் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.