Recap 2023

2023 ரீவைண்டு: பேரழிவில் இந்த வருடத்தையும் இணைத்துக் கொண்ட டிசம்பர்

Published On 2023-12-28 10:09 GMT   |   Update On 2023-12-28 10:09 GMT
  • 21-ம் நூற்றாண்டில் தமிழகம் டிசம்பர் மாதம் பல பேரழிவுகளை கண்டுள்ளது.
  • 2004 சுனாமி, 2015 மழை வெள்ளம், வர்தா புயல் என இன்னல்களை சந்தித்துள்ளது.

தமிழகத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் சற்று ஆகாது என்றே கூறலாம். 21-ம் நூற்றாண்டில் தமிழகம் இயற்கை சீற்றங்களை டிசம்பர் மாதத்தில்தான் எதிர்கொண்டுள்ளது.

2004-ம் ஆண்டு வங்கக் கடலில் சுனாமி ஏற்பட்டு தமிழகத்தின் பெரும்பகுதியில் பேரழிவு ஏற்பட்டது. நாகப்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் கடல் நீர் சூழ்ந்து கொண்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல மாதங்கள் பிடித்தன.

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் ஒருபோதும் மறக்காது. சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த அதேவேளையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் அதிகப்படியான வெள்ளம் திறந்து விடப்பட்டது.

ஏற்கனவே மழை வெள்ளம் தேங்கிய நிலையில், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் சேர்ந்து அடையாறு கரையோரம் உள்ள பகுதியை சூழ்ந்தது. மேலும், அதுவரை தண்ணீரை கண்டிராக சென்னையில் பெரும்பாலான மையப்பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் உயிரிழந்த நிலையில், மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

2016-ல் வர்தா புயல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சுழன்று அடித்தது. இதில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை என்றாலும் ஆயிரக்காணக்கான மரங்கள் வேரோடு சரிந்தது போக்குவரத்தை முற்றிலும் முடக்கியது.

சுமார் 8 வருடங்கள் கழித்து இந்த வருடம் மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டிசம்பர் மாதம் 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி கனமழை பெய்தது. இதனால் மீண்டும் ஒருமுறை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்தன. இந்த முறை ஏரியில் இருந்து சீரான அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும், கனமழை வெளுத்து வாங்கியதால் வெள்ளக்காடானாது. சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம் பயனளிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.

மழை மற்றும் காற்று காரணமாக எண்ணூர் துறைமுக முகத்துவாரத்தில் எண்ணைக் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி உள்ள கடற்பகுதி எண்ணெப் படலமாக மாறியது. பின்னர் கடும் போராட்டத்திற்குப்பின் எண்ணெய் அகற்றப்பட்டது.

மிக்சாங் புயலால் சென்னை மக்கள் அடைந்த சோகம் அடங்குவதற்குள் 17 மற்றும் 18-ந்தேதிகளில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 150 ஆண்டுகள் இல்லாத வகையில் வரலாறு காணாத மழை பெய்தது. மேக வெடிப்பு இல்லை, புயல் இல்லை, காற்றழுத்த தாழ்வு இல்லை, கீழடுக்க சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்யாது என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இவ்வளவு மழை எப்படி பெய்தது என அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.


இந்த கனமழை காரணமாக இதுவரை தண்ணீர் தேங்காத கூடங்குளம் போன்ற வறண்ட பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டால், தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடம்வரை வெள்ளத்தில் மிதந்தது.

ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர்- சென்னை ரெயில் சுமார் ஆயிரம் பயணிகளுடன் சிக்கியது. திருச்செந்தூர்- திருநெல்வேலி, தூத்துக்குடி- திருநெல்வேலி பாதைகள் முற்றிலும் சேதடைந்தன. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியது. ஏரி, குளம் என அனைத்தும் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இரண்டு வாரங்களாக பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் வடியாமல் மக்கள் வேதனையடைந்தனர்.

Tags:    

Similar News