2023 ரீவைண்ட்: கவர்னர் உரை Vs முதல்வர் தீர்மானம்
- தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசிக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு.
- திராவிட மாடல் போன்ற வாக்கியங்களை குறிப்பிடவில்லை என அவருக்கு எதிராக தீர்மானம்.
தமிழக சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை கவர்னர் அப்படியே வாசிப்பதுதான் நடைமுறை.
ஆனால் ஜனவரி 9-ந்தேதி சட்டசபை கூடியதும் கவர்னர் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது, திராவிட மாடல் ஆகிய வாசகங்களை வாசிக்கவில்லை. இதை உன்னிப்பாக கவனித்த துரைமுருகன் உடனடியாக ஒரு தீர்மான அறிக்கையை தயார் செய்து முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.
கவர்னர் முழு உரையையும் வாசித்தபின், சபாநாயகர் தமிழ் உரையை வாசிப்பார். அதன்பின் தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடையும்.
சபாநாயகர் தமிழ் உரையை வாசித்த முடித்த உடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அந்த தீர்மானத்தில் அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து பகுிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட உரை இடம்பெறும் எனக் கூறப்பட்டிருந்தது.
முதலமைச்சர் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார் என ஆளுநர் ஆர்.என். ரவி நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் தங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது எனக் கூறியதும், அவை முடிவடையும் முன்னதாகவே ஆளுநர் ஆர்.என். ரவி அவையை விட்டு உடனடியாக வெளியேறினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இருதரப்பிலும் பரஸ்பர குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.