2024 ரீவைண்ட்: 18வது மக்களவை தேர்தல்- தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் வென்ற தி.மு.க கூட்டணி
- 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது.
- தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தியாவின் 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பின்னர், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தொடர்ந்து, ஏப்ரல் 20ம் தேதி அன்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
மூன்றாவது முறையாக வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.