2024 ரீவைண்ட்: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்- துணை முதல்வரான உதயநிதி
- செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றம்.
- உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தமிழக அமைச்சரவையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டில் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து 15 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு, செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்தார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்
செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியான மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டன.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், இதே துறையைக் கையாண்டு வந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டன.
நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது.
அடுத்து, அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியனும் சுற்றுலா துறை அமைச்சராக பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் புதிதாக இணைந்தனர்.
செஞ்சி மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மை நலத்துறை, ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, 5-வது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வராானார் உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த 2022 டிசம்பர் 14-ம் தேதியில், தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி அறிவிக்கப்பட்டார்.
அதன்பிறகு நடப்பு ஆண்டில் சில மாதங்களாக உதயநிதியைத் துணை முதல்வராக்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தொடங்கி பலரும் கோரிக்கை வைத்தனர். முதல்வரும் அந்தக் கோரிக்கை வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை என பதிலளித்திருந்தார். இந்தநிலையில், தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக துணை முதல்வராகப் பதவியேற்கும் மூன்றாவது நபராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.