2024 ரீவைண்ட்: இந்த ஆண்டில் 223 படங்கள் தோல்வி- தமிழ் சினிமாவில் ரூ.1,000 கோடி நஷ்டம்
- பெரிய பட்ஜெட் படங்களை ரூ.50 கோடி முதல் ரூ.200 கோடி வரை செலவில் எடுத்துள்ளனர்.
- லப்பர் பந்து, லவ்வர், பேச்சி போன்ற சிறு பட்ஜெட்டில் உருவான படங்களும் வெற்றிபெற்று கவனம் ஈர்த்தன.
2024-ம் ஆண்டு தமிழ் சினிமா பெரும் வசூல் குவிக்கும், இந்திய சினிமாவையே தமிழ் சினிமா கவனிக்க வைக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர்.
முன்னணி நடிகர்களின் படங்களால் பெரிய அளவில் லாபம் ஈட்டலாம் என நம்பிக்கையுடன் காத்திருந்த தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
தமிழ் சினிமா இந்த ஆண்டு கண்ட சாதனைகள், வேதனைகள் குறித்து திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் கூறியதாவது:-
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 241 படங்கள் ரிலீசாகி உள்ளன. இதில் அதிக படங்கள் தோல்வி அடைந்து உள்ளன என்பது வருத்தமான விஷயமே.
இந்த படங்கள் மூலம் சுமார் ரூ.1,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவிட்டுள்ளனர். நடுத்தர பட்ஜெட் படங்கள் ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி செலவில் தயாராகி உள்ளன. மொத்தம் 186 சிறிய படங்கள் வந்துள்ளன. இந்த படங்களின் பட்ஜெட் ரூ.400 கோடி வரை இருக்கும்.
பெரிய பட்ஜெட் படங்களை ரூ.50 கோடி முதல் ரூ.200 கோடி வரை செலவில் எடுத்துள்ளனர்.
திரைக்கு வந்த 241 படங்களும், ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் 18 படங்கள் மட்டுமே லாபம் பார்த்து, தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது.
இந்த 18 படங்களில் மெகா பட்ஜெட்டில் வெளியான விஜய் இருவேடங்களில் நடித்த 'தி கோட்', ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்', தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படங்கள் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளன.
இதற்கு அடுத்தபடியாக பெரிய பட்ஜெட்டில் தயாரான ரஜினிகாந்தின் வேட்டையன், சுந்தர் சி.யின் அரண்மனை-4, விஜய் சேதுபதியின் மகாராஜா, அரவிந்தசாமி-கார்த்தி கூட்டணியில் மெய்யழகன் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன.
நடு்த்தர பட்ஜெட்டில் தயாரான டிமாண்டி காலனி-2, வாழை, கருடன், ரோமியோ, ஸ்டார், பிளாக், பி.டி.சார், அந்தகன் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. இதில் டிமாண்டி காலனி-2 படமானது பிரியா பவானி சங்கருக்கு மீண்டும் ஸ்டார் அந்தஸ்தை கொடுத்தது. அந்தகன் மூலமாக பிரசாந்தும், சிம்ரனும் மீண்டும் தங்களது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கினார்கள்.
அதேபோல லப்பர் பந்து, லவ்வர், பேச்சி போன்ற சிறு பட்ஜெட்டில் உருவான படங்களும் வெற்றிபெற்று கவனம் ஈர்த்தன. எதார்த்த கதைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட மேற்கண்ட படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் பிடிக்காத வசூலை கூட பிடித்து ஆச்சரியம் தந்தன. இதன்மூலம் அந்த படங்களில் நடித்த பிரபலங்களுக்கு படவாய்ப்புகளும் குவிந்தன.
திரைக்கு வந்த 241 படங்களில் 18 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அதாவது 7 சதவீத படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன. மீதி உள்ள 223 படங்கள் தோல்வி அடைந்துள்ளன.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் இந்த வருடம் சுமார் ரூ.1,000 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். எனவே தரமான, கவனம் ஈர்க்கும் படங்கள் இன்னும் அதிகளவில் வரவேண்டும். அப்போது தான் சினிமாவுக்கு அது நல்லதாக அமையும்.
இவ்வாறு கே.ராஜன் தெரிவித்தார்.
நடிகர்-நடிகைகளின் சம்பளம் குறைவாக உள்ள கேரளா சினிமாவிலேயே ரூ.600 முதல் ரூ.700 கோடி வரை இந்த ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்